மும்பை : ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங் ஒரு பக்கம் சற்று தாக்குப்பிடித்தாலும், பந்துவீச்சு முற்றிலும் சொதப்பலாக அமைந்துள்ளது .குறிப்பாக அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா இந்த சீசனில் இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதனால் மும்பை அணியின் பந்துவீச்சுத் துறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை, அதன் பிறகு விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக ,196 ரன்கள் இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத்திலேயே அதிரடியாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சிம்ரன் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இறுதியில் 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தொடர் தோல்வியால் வாடிப்போன மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மைதானத்தில் வேதனையுடன் காணப்பட்டார்.
பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி, “விரைவில் முன்பு இருந்தபோல் கம்பேக் கொடுப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பலவீனம் இந்த சீசனில் அணியின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பும்ரா, தீபக், போல்ட் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பேட்டிங் ஒரு பக்கம் சற்று தாக்குப்பிடித்தாலும், பந்துவீச்சில் ஏற்பட்ட சொதப்பல் அணியை தொடர்ந்து தோல்வியை நோக்கி இழுத்துச் செல்கிறது.இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் ஒன்றில் தொடர்கிறது. இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
