டெல்லி : இந்திய இளைஞர்களின் விருப்பமான இருசக்கர வாகனமான டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) வரிசையில், மார்வெல் (Marvel) காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஸ்குவாட் எடிஷனில் (Super Squad Edition) புதிய ‘டாக்டர் டூம்’ (Doctor Doom) வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐயன் மேன், பிளாக் பாந்தர், டெட்பூல் மற்றும் வோல்வரின் போன்ற மார்வெல் கதாபாத்திரங்களின் பெயர்களில் பைக்குகள் வெளிவந்த நிலையில், தற்போது 'டாக்டர் டூம்' தீம் கொண்ட இந்த புதிய பைக் அறிமுகமாகியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 95,320 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் கலர் டிசைன் விபரங்கள்
டிவிஎஸ் நிறுவனம் மார்வெல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த சூப்பர் ஸ்குவாட் எடிஷன் பைக்குகள், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வயது ரைடர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த டாக்டர் டூம் எடிஷனுக்கு 'டூம்ஸ்டே' (Doomsday) எனப்படும் பிரத்யேக ஸ்பெக்ட்ரல் பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.
பைக் முழுவதும் அடர் பச்சை, லைட் பச்சை மற்றும் ஃபுளோரசன்ட் பச்சை என பலவிதமான பச்சை நிறச் சாயல்களும், அவற்றுக்கு கான்ட்ராஸ்ட்டாக வெள்ளை நிறக் கோடுகளும் (Stripes) இடம்பெற்றுள்ளன. மேலும், பெட்ரோல் டேங்க்கின் இருபுறங்களிலும் டாக்டர் டூமின் முகமூடி போன்ற வடிவமைப்பு வரையப்பட்டுள்ளது.
நவீன அம்சங்கள் மற்றும் டெக்னாலஜி
இந்த புதிய டாக்டர் டூம் எடிஷன் பைக்கில் பல நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ரிவர்ஸ் மல்டிகலர் எல்சிடி டிஸ்ப்ளே (Reverse multicolour LCD display) வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அறிவிப்புகள் போன்ற 85-க்கும் மேற்பட்ட கனெக்டெட் வசதிகளைப் பெறலாம். மேலும், குரல் கட்டளைகள் (Voice commands) மூலமாகவும் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
இன்ஜின் செயல்திறன் மற்றும் மைலேஜ்
இப்பைக் செயல்திறனில் மிகவும் வலுவானதாக உள்ளது. இதில் 124.8சிசி ஏர் மற்றும் ஆயில்-கூஸ்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 11.38 பிஎச்பி பவரையும், 11.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் உள்ள iGO அசிஸ்ட் தொழில்நுட்பம் மூலம் இதன் டார்க் திறன் 11.75 என்எமாக அதிகரிக்கிறது. மேலும், சிறந்த பிக்கப்பிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதுடன், வெறும் 5.8 விநாடிகளில் 0 முதல் 60 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
பொதுமக்களும், எளிய மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் மைலேஜைப் பொறுத்தவரை, இப்பைக் லிட்டருக்கு தோராயமாக 60 முதல் 65 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இதில் உள்ள ஈக்கோ (Eco), பவர் (Power) மற்றும் பூஸ்ட் (Boost) என மூன்று ரைடிங் மோடுகள் மற்றும் கிளைடு த்ரூ டிராபிக் (GTT) தொழில்நுட்பம் ஆகியவை தினசரி நகரப் பயணங்களை மிகவும் எளிமையாக்குகின்றன.
நீண்ட தூரப் பயணங்களுக்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் சிறப்பான கொள்ளளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக முன்பக்கத்தில் 240 மி.மீ ரோட்டோபெட்டல் டிஸ்க் பிரேக், சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் டெக்னாலஜி (SBT) மற்றும் இன்ஜின் கட்-ஆஃப் வசதியுடன் கூடிய சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
