ஹைதராபாத் :ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஏப்ரல் 23,) நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஹைதராபாத் மாநிலம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். மேலும், இன்று சியர்லீடர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் வாண வேடிக்கைகளும் நடத்தப்படக் கூடாது எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். இது துக்கத்தின் அடையாளமாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாடு காட்டுவதற்காகவும் செய்யப்படுகிறது.
முன்பு, பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது முக்கிய தலைவர்களின் மறைவு போன்ற சந்தர்ப்பங்களில், ஐபிஎல் அணிகள் மற்றும் BCCI இதேபோன்ற மரியாதை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
