“அது எனக்கு வலி”...CSK தோல்வி பின் மனம் திறந்த அஷ்வின்!

மனதளவில் மிகவும் தொந்தரவாக இருந்தது என ஆர்சிபியிடம் தோற்ற பிறகு பழைய காயங்களை பற்றி முன்னாள் வீரர் ஆஷ்வின் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஏப்ரல் 5ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் பெரும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்தனது பழைய கஷ்டமானசம்பவங்கள் குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அஷ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “கடந்த ஆண்டு CSK அணியுடன் நான் கழித்த சீசன் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. தனிப்பட்ட முறையிலும் அது எனக்கு மிகவும் கடினமான சீசனாக இருந்தது. உண்மையில், என் மனதில் நான் இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உணர்ச்சி ரீதியாக எனக்கு அதற்கான மன வலிமை இல்லை” என்று தெரிவித்தார்.

அந்த அனுபவத்தைப் பற்றி மேலும் பேச விரும்பாத அஷ்வின், “அதைப் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. அது மனதளவில் மிகவும் தொந்தரவாக இருந்தது. எனக்கு மிகவும் வலியான அனுபவம் அது. சென்னையில் தொடங்கினேன், என் சொந்த ஊரிலேயே முடித்துக்கொள்கிறேன் என்று நினைத்து ஓய்வு பெற்றேன்.

அவர்களுக்கு (சிஎஸ்கே மேலாண்மைக்கு) தலைவலியை உண்டாக்க விரும்பவில்லை. என்னைத் தக்கவைக்கலாமா அல்லது வெளியேற்றலாமா என்ற குழப்பத்தைத் தவிர்க்கவே நானே ஓய்வு பெற்றேன். அவர்களும் 10 கோடி ரூபாய் சேமித்தனர். ஆனாலும் இன்னும் எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன, நம்பிக்கை இருந்தது” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

CSK அணி 2026 சீசனுக்கு முன்பு இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோரை ஏலத்தில் சேர்த்தது. ஆனால் இதுவரை அணி எந்தத் துறையிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

அஷ்வின் மேலும், “பெங்களூருக்கு எதிரான போட்டியில் இருந்து எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. RCB அணியின் வலிமையை நான் அறிந்திருந்தேன். ஆனால் CSK கடைசி போட்டியில் காட்டிய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். RCB ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்ததும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் RCB எப்படி ஆடியது என்பது அனைவருக்கும் எச்சரிக்கையாக அமைந்தது” என்று கூறினார்.

CSK அணியின் பேட்டிங் யூனிட் இதுவரை எந்தப் போட்டியிலும் சரியாக செயல்படவில்லை. RCB அணிக்கு எதிராக டெத் ஓவர்களில் பந்து வீச்சும் மோசமாக இருந்தது. RCB 250 ரன்கள் குவித்து, இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது.பெங்களூருக்கு எதிரான போட்டியை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது சுமார் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் 11ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.