தர்மசாலா : 2026 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி, சாம்பியன் அணிக்கே உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தாக்கம் இருக்கும் என கருதி எடுத்த இந்த முடிவு, பின்னர் தவறான கணிப்பாக மாறியது.
தொடக்கத்திலேயே வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்டி 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். விராட் கோலியும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கலும் வேகமாக ரன்கள் சேர்த்த நிலையில், இருவரையும் ஒரே ஓவரில் ஜேசன் ஹோல்டர் வெளியேற்றினார்.
அதன்பிறகு கேப்டன் ரஜத் படிதார் மற்றும் க்ருனால் பாண்ட்யா இணைந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்தனர். க்ருனால் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், மறுபுறம் படிதார் அபாரமாக விளையாடினார். பவுண்டரி, சிக்சர்கள் மழையில் குஜராத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
குறிப்பாக படிதார் பலமுறை கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 5 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும். ஜிதேஷ் ஷர்மாவும் கடைசியில் 5 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்ததால், ஆர்சிபி 20 ஓவர்களில் 254/5 என்ற மலைப்போன்ற இலக்கை நிர்ணயித்தது.
255 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சாய் சுதர்சன் 14 ரன்களில் ஹிட் விக்கெட்டாக வெளியேறினார். அடுத்தடுத்த ஓவர்களில் சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் அவுட்டானதால் குஜராத் அணி ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தது.
முக்கிய வீரர்கள் அனைவரும் விரைவில் பெவிலியன் திரும்பிய நிலையில், ராகுல் தெவாட்டியா மட்டும் தனியாக போராடினார். அவர் 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்களிடம் இருந்து பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இறுதியில் குஜராத் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.
ஆர்சிபி பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி முக்கிய பங்கு வகித்தார். அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்ட அவர் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்கம் ஏற்படுத்தினார். புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் தார் மற்றும் க்ருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஜோஷ் ஹேசல்வுட் ஜோஸ் பட்லரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் ஆர்சிபி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் ஒரு வாய்ப்புடன் தொடரில் நீடிக்கிறது. Eliminator போட்டியின் வெற்றியாளரை எதிர்த்து Qualifier 2-ல் களமிறங்கி மீண்டும் பைனலுக்கு வர போராட உள்ளது.
