இந்தியா போட்டி புறக்கணிப்பு: பாகிஸ்தானுக்கு முழுத் தடை விதிக்குமா ICC?

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Featured image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையின் கொழும்பில் வரும் 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை மட்டும் புறக்கணிப்பதாக PCB தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஐசிசியின் கடும் கண்டனத்திற்கு வழிவகுத்துள்ளது.

ஐசிசி, பாகிஸ்தானின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மறுப்பது, கிரிக்கெட்டின் நேர்மை, சமத்துவம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், பாகிஸ்தான் அணியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொத்தமாக தடை செய்யவும், நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஐசிசி விதிகளின்படி, புறக்கணிப்பு முடிவால் பாகிஸ்தான் அணி அந்தப் போட்டியை தோல்வியாக கருதப்படும். 2 புள்ளிகளை தானாகவே இழக்கும். தவறவிட்ட அணியின் முழு ஓவர்களும் எதிரணிக்கு எதிராக கணக்கிடப்படும். நிகர ரன் விகிதத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

மேலும், ஐசிசியின் ஆண்டு வருவாயில் PCB-யின் பங்காக உள்ள சுமார் 34.5 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.290 கோடி) நிறுத்தி வைக்கப்படும். வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க NOC பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். பாகிஸ்தான் ICC போட்டிகளை நடத்தும் உரிமையையும் இழக்க நேரிடும்.

ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானின் இந்த புறக்கணிப்பு முடிவு டி20 உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசியின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.