சூப்பரா ஆடுறாரு...இடம் கொடுங்க! சர்பராஸுக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்!

இந்த சீசனில் உள்ளூர் போட்டிகளில் சர்ஃபராஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Featured image

விஜய் ஹசாரே டிராபி போட்டியில் கோவா அணிக்கு எதிராக சர்பராஸ் கான் வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். இந்த அபார ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அடுத்த ஐபிஎல் சீசனில் சர்பராஸுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தினார்.

சையத் முஸ்தாக் அலி டிராபியில் சர்பராஸ் சிறப்பாக விளையாடி ஒரு சதம், மூன்று அரைசதங்கள் உள்ளிட்டவற்றை அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் ரூ.75 லட்சம் அடிப்படை விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஏலத்தில் முதலில் விற்பனையாகாமல் போன சர்பராஸை பின்னர் சிஎஸ்கே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், சர்பராஸின் சையத் முஸ்தாக் அலி டிராபி ஸ்கோர்களை (100*, 52, 64, 73) பட்டியலிட்டு, விஜய் ஹசாரேயில் 55 மற்றும் 157 ரன்கள் அடித்ததை பாராட்டினார். “சுழற்பந்தை மிடில் ஓவர்களில் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் மூலம் அடித்து நொறுக்குகிறார். அவன் கதவைத் தட்டவில்லை, இடித்து உடைத்து வருகிறான்” என்று கூறினார். சிஎஸ்கே அவரது ஃபார்மை பயன்படுத்தி பிளேயிங் லெவனில் இடம் அளிக்க வேண்டும் என்று அஸ்வின் கேட்டுக்கொண்டார்.சர்பராஸ் ஐபிஎல்லில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2015-ல் ஆர்சிபிக்காக அறிமுகமான அவர், 2023-க்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாடவில்லை. சிஎஸ்கேயில் இணைந்த பிறகு, “சிஎஸ்கே எனக்கு புது வாழ்க்கை அளித்துள்ளது. 2026 டைட்டிலை சிஎஸ்கே வெல்லும்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.சையத் முஸ்தாக் அலி டிராபியில் சர்பராஸ் 329 ரன்கள் அடித்து 82.25 சராசரி, 204.34 ஸ்ட்ரைக் ரேட் பதிவு செய்தார். இந்த ஃபார்ம் ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அஸ்வினின் பாராட்டு சர்பராஸின் திறமையை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் சர்பராஸின் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.