ஃபிட்டாக இருக்கணும்னு மட்டும் ஃபிட்டாக இருக்காதே ரோஹித்...அட்வைஸ் கொடுத்த அமித் மிஸ்ரா!

இந்த ஆண்டு அக்டோபரில் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதற்கு முன்பு ரோஹித் சர்மா சுமார் 11 கிலோ எடையைக் குறைத்திருந்தார்.

Featured image

டெல்லி :இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் மாற்றம் குறித்து குறிப்பிடத்தக்க கருத்து தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடர் டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா சமீபத்தில் 11 கிலோ எடை குறைத்து உடல் தகுதியை மேம்படுத்தியுள்ளார். அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோஹித், சமீபத்திய ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாடி ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்ளிட்ட ரன்களை குவித்துள்ளார்.

MensXP யூடியூப் சேனலில் பேசிய அமித் மிஸ்ரா, நவீன கிரிக்கெட்டில் உடல் தகுதியின் வரையறை மாறிவிட்டதாகக் கூறினார். “இன்று உடல் தகுதி என்பது தோற்றத்தைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. மெலிந்த தோற்றத்துக்காக மட்டும் உடற்பயிற்சி செய்வது சரியல்ல. ஒவ்வொருவரின் உடல் வகை வேறுபட்டது. இயற்கையாக உணவு உட்கொண்டு, கடினமாக உழைத்து உடல் தகுதியைப் பேண வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

மிஸ்ரா மேலும் கூறுகையில், “சிலர் குறுகிய காலத்தில் தோற்றத்துக்காக உடலை மாற்றிக்கொண்டு பின்னர் உடல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். நல்ல உறக்கம், சீரான உணவு, இயற்கையான பயிற்சிகள் முக்கியம். ஜிம்முக்கு செல்வது நல்லது, ஆனால் மைதானத்தில் ஓடுவது, இயற்கையான உடற்பயிற்சி செய்வது அவசியம்” என்று வலியுறுத்தினார்.

ரோஹித் சர்மா எப்போதும் உடல் தகுதியுடன் இருந்தவர் என்று பாராட்டிய மிஸ்ரா, “ரோஹித் முன்பும் தகுதியான வீரர்தான். அவருடன் விளையாடிய அனுபவம் உள்ளது. சிலர் அவரை உடல் எடை அதிகம் என்று கூறினாலும், மைதானத்தில் அவர் ஒருபோதும் மந்தமாக இருந்ததில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்” என்று தெரிவித்தார்.தற்போது விஜய் ஹசாரே டிராபிக்கு மும்பை அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, ஆரம்ப சுற்றுகளில் விளையாடவுள்ளார். அதன்பிறகு ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் இணையவுள்ளார். ரோஹித் சர்மாவின் உடல் மாற்றமும் சமீபத்திய சிறப்பான ஆட்டமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.