தோனியா கோலியா? ஹர்மன்பிரீத் கவுர் சொன்ன நச் பதில்!

தோனியின் அமைதியான தலைமை, கடின உழைப்பு, கடைசி வரை போராடும் மனோபாவம் தன்னை ஈர்ப்பதாகக் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Featured image

டெல்லி :இந்திய மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளிடம் பேசினார். இந்தியாவை முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வென்று தலைமை தாங்கியதற்காக அவர் பள்ளியால் பாராட்டப்பட்டார். நவம்பர் 2-ஆம் தேதி நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதன்மூலம் கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருடன் ஹர்மன்பிரீத் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில்இடம்பிடித்தார்.

மாணவிகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஹர்மன்பிரீத், “விராட் கோலி vs தோனி – யாரை தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு தயங்காமல் “எம்எஸ் தோனி” என்று பதிலளித்தார். தோனியின் அமைதியான தலைமை, கடின உழைப்பு, கடைசி வரை போராடும் மனோபாவம் தன்னை ஈர்ப்பதாகக் கூறினார். அதேநேரம் விரேந்தர் சேவாக்கை தனது மிகப்பெரிய உத்வேகமாகக் குறிப்பிட்டார். “சேவாக் போல தைரியமாக ஆடுவதுதான் என் ஸ்டைல்” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான ஹர்மன்பிரீத், இது அவரது ஐந்தாவது உலகக் கோப்பை. டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புவதாகவும், நீண்ட நேரம் ஆடுவதால் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்றும் கூறினார். இளம் பெண் கிரிக்கெட்டர்களுக்கு அறிவுரை கூறிய அவர், “கடின உழைப்பு, கனவு, நம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று உற்சாகப்படுத்தினார்.

மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்த ஹர்மன்பிரீத், “இப்போது ஆண்கள்-பெண்கள் கிரிக்கெட் ஒப்பீடு இல்லாமல், கிரிக்கெட் மட்டுமே பேசப்படுகிறது. மைதானங்கள் நிரம்பியுள்ளன, பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது – இது பெருமைக்குரிய தருணம்” என்றார். உலகக் கோப்பை வென்ற பயணம் கடினமாக இருந்தாலும், தோல்விகளுக்குப் பிறகு திரும்பி வந்தது பெரிய பாடமாக அமைந்ததாகவும் கூறினார்.

லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்த இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஹர்மன்பிரீத்தின் தலைமையிலான இந்திய அணி, வரலாற்று சாதனை படைத்துள்ளது.