வயது தடையல்ல… ரோஹித்–கோலி போன்ற அனுபவம் தான் பலம் – தோனி கருத்து!

ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் 2027 உலகக்கோப்பையில் விளையாடலாமா என்ற கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.

Featured image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு நேரடியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். “வயது ஒரு காரணியல்ல. உடற்தகுதி மற்றும் திறமைதான் முக்கியம்” என்று அவர் உறுதியாகக் கூறினார். 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை வெறும் வயதை வைத்து நீக்கக் கூடாது என்றும், அவர்களின் செயல்திறன் மற்றும் உடல் தகுதியை மட்டுமே அளவுகோலாக வைக்க வேண்டும் என்றும் தோனி வலியுறுத்தினார்.

தோனி மேலும் கூறுகையில், “ஒருவர் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டார் என்று மட்டும் அவர் விளையாட தகுதி அற்றவராகி விட மாட்டார். பெரிய போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது மிகவும் அவசியம்” என்றார். 20 வயதில் அனுபவம் பெறுவது சாத்தியமில்லை என்றும், அனுபவம் பெற 30-35 வயதுக்கு மேல் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் விளக்கினார்.

சச்சின் டெண்டுல்கர் போன்ற விதிவிலக்குகளைத் தவிர்த்து, பெரும்பாலான வீரர்களுக்கு அனுபவம் என்பது 30 வயதுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்று தோனி சுட்டிக்காட்டினார்.ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரைப் பொறுத்தவரை, “அவர்களை விளையாட வேண்டாம் என்று யாரும் சொல்லக் கூடாது. அவர்களே முடிவு செய்ய வேண்டும்” என்று தோனி கூறினார். அவர்கள் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உடற்தகுதியுடன் இருந்தால் 2027 உலகக் கோப்பையில் விளையாடலாம் என்றும், அவர்களை வயதை வைத்து நீக்குவது தவறு என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அவர்கள் 35 வயதில் இருந்தாலும், உடற்தகுதியுடன் செயல்பட்டால் 35 என்பது எண்ணிக்கை மட்டுமே” என்று தோனி தெளிவுபடுத்தினார்.தோனி, அனுபவத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். “அனுபவம் எப்படி கிடைக்கிறது? 20 வயதில் அனுபவம் கிடைக்காது. 16-17 வயதில் ஆரம்பித்து, 30-32 வயதில் தான் உண்மையான அனுபவம் கிடைக்கிறது” என்று அவர் கூறினார்.

முக்கியமான போட்டிகளில் அழுத்தத்தை கையாள்வது, இதயத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது ஆகியவை அனுபவத்தால் மட்டுமே வரும் என்று தோனி விளக்கினார். குறிப்பாக பேட்டிங் வரிசையில் கீழே விளையாடுபவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பந்து வீசுபவர்களுக்கு இந்த அனுபவம் மிக முக்கியம் என்றார்.இறுதியாக, தோனி அனைத்து வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்

. “24 வயதானாலும் 35 வயதானாலும், செயல்திறன் மற்றும் உடற்தகுதி மட்டுமே அளவுகோல். யாராக இருந்தாலும் சமமாக நடத்த வேண்டும். செயல்பாடு இருந்தால் இருப்பார்கள், இல்லையெனில் நீக்கப்படுவார்கள்” என்று அவர் தெளிவுபடுத்தினார். வயதை வைத்து முடிவெடுக்கக் கூடாது, செயல்திறனை வைத்தே தேர்வு செய்ய வேண்டும் என்ற தோனியின் கருத்து, இந்திய அணியின் எதிர்கால தேர்வுகளுக்கு முக்கியமான செய்தியாக அமைந்துள்ளது.