விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

The Minister informed that we are consulting with the agricultural teams of the political party regarding the separate budget for agriculture.

வேளாண் தனி பட்ஜெட் குறித்து அரசியல் கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என அமைச்சர் தகவல்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14ம் தேதி வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து விவசாய சங்கம், அரசியல் கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும் எனவும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆகவே, கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அம்சங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.