#Breaking:சட்டப் பேரவையில் பாஜக வெளிநடப்பு...!

BJP legislators have now walked out of the assembly in protest of the agrarian laws

சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்துள்ளார்.

அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர், டெல்லி, மேற்குவங்கத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதற்கு,பாமக,காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில்,சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்தும்,எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதனையடுத்து,பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

“மத்திய அரசால் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள்,வேளாண்மக்கள் நல்ல முறையில்வாழ வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் உற்பத்தி செய்த நல்ல பொருட்களுக்கு அதன் அடிப்படை ஆதார விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆனால்,மாநில அரசாங்கம் ஏதோ உள்நோக்கத்தோடு,மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானங்களை கொண்டு வந்துள்ளது.இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானது.எனவே,இதனை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.