வியட்நாம் படகு விபத்து : படகு கேப்டன் கைது!

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, கடல் சீற்றத்திலும் படகை இயக்கிய கேப்டன் ஹாங் ஹாய் (57) என்பவரை வியட்நாம் காவல்துறை கைது செய்துள்ளது.

Hero Image

வியட்நாம் : ஃபூ குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததாலும், அலட்சியமாகச் செயல்பட்டதாலும் இந்த விபத்து நடந்ததாகக் கண்டறியப்பட்டு, படகின் கேப்டன் ஹாங் ஹாய் (57) என்பவரை வியட்நாம் காவல்துறை கைது செய்துள்ளது.

விபத்து நடந்த சமயம் கடல் சீற்றத்துடன் இருந்தபோதும், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் படகை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கேப்டன் ஹாங் ஹாய் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில் 10 பேர் தமிழர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகவும், கண்ணியமாகவும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, உயிரிழந்த 15 பேரின் உடல்களும் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு விரைவில் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க ஹோ சி மின் சிட்டி மற்றும் ஹனோய் நகரங்களில் உள்ள அவசர உதவி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வியட்நாம் படகு விபத்து : படகு கேப்டன் கைது!