பெய்ரூட் அட்டாக்கை ஸ்டாப் பண்ணுங்க! நெதன்யாகுவுக்கு டிரம்ப் வைத்த செக் !

நெதன்யாகுவுடன் மிக முக்கிய பேச்சு நடத்தி, பெய்ரூட் மீதான தாக்குதலைத் தவிர்க்கக் கோரியதாகவும், அவரும் படைகளைத் திரும்பப் பெற சம்மதித்துவிட்டார் என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Hero Image

லெபனான் : தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடுக்க தயாராக இருந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் தலையீட்டால் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளங்களை குறிவைத்து பெய்ரூட் நகருக்குள் தீவிர தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முழு தயாரிப்புடன் இருந்தார். இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் நேரத்தில் டிரம்ப் நேரடியாக நெதன்யாகுவை தொடர்புகொண்டு பேசினார். தாக்குதலை உடனடியாக கைவிடுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நெதன்யாகுவுடன் மிக முக்கிய பேச்சு நடத்தினேன். பெய்ரூட் மீதான பெரிய தாக்குதலைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் தனது படைகளை திரும்பப் பெற சம்மதித்துவிட்டார்" என பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த தொலைபேசி உரையாடல் அத்தனை சுமுகமாக இல்லை என அமெரிக்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளுக்கு டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும், உரையாடலின் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் வாஷிங்டன் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

ஈரானுடன் நடைபெற்று வரும் முக்கிய பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் வகையில் இப்பகுதி முழுவதும் போர் வெடிக்கும் அபாயத்தை உணர்ந்தே டிரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. டிரம்பின் இந்த தலையீடு காரணமாக மேற்கு ஆசியாவில் தற்போதைக்கு பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இன்னும் பதற்றம் நீடிப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.