வாஷிங்டன் :இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது Truth Social தளத்தில், இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் கூடுதல் அபராதமாக இந்த வரியை விதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இதனை “நியாயமற்றது” என விமர்சித்துள்ளது. மேலும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகவில்லை எனவும், வரி உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரி மேலும் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் உக்ரைன் போர் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை என்றும், இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அதன் மீதான வரியை உயர்த்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்துவேன், இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும் பகுதியை திறந்த சந்தையில் பெரிய லாபத்திற்காக விற்கிறது. உக்ரைன் – ரஷ்ய போரில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரி மிரட்டல்களுக்கு எதிராக, பிரதமர் மோடி உறுதியான நிலையில் பேசினார். மக்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இதேசமயம், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதாக இந்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த அரசு இதுவரை எந்தவொரு உத்தரவும் வழங்கவில்லை, வாங்குவதை நிறுத்த வேண்டுமா என்ற முடிவும் எடுக்கப்படவில்லை.
