மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது சாகைங் பால்ட் (Sagaing Fault) பகுதியில், மண்டலே நகருக்கு அருகே, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது கடந்த நூற்றாண்டில் மியான்மரை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகவும் மாறியது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக இருந்தது, ஆனால் மார்ச் 31 நிலவரப்படி 1,700 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் 3,408 பேர், காணாமல் போனவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என மதிப்பிட்டுள்ளது. மண்டலே, நேபிடாவ், சாகைங் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில், கட்டுமானத்தில் இருந்த 33 மாடி கட்டிடம் இடிந்ததில் 18 பேர் உயிரிழந்தனர், 76 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மண்டலேயில் உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் மீட்பு பணிக்கான பெரிய இயந்திரங்கள் பற்றாக்குறையால் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. நேபிடாவில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ட்ரோன்கள், மீட்பு நாய்கள், எக்ஸ்காவேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் சேதமடைந்ததால், பலர் திறந்த வெளியில் சிகிச்சை பெறுகின்றனர். மார்ச் 30 முதல் பல அதிர்வுகள் (aftershocks) ஏற்பட்டு, மக்களை பீதியில் இருக்கிறார்கள். மின்தடையும் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள்.
மேலும், நிலநடுக்கம் காரணமாக மண்டலேயில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், பழமையான கட்டிடங்கள் இடிந்துள்ளன. மண்டலே அரண்மனை, மகாமுனி பகோடா ஆகியவை சேதமடைந்தன. நேபிடாவில் சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டன. ஒரு அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது. மேலும், சீனாவின் யுனானில் 847 வீடுகள் சேதமடைந்தன, 2 பேர் காயமடைந்தனர். இந்தியாவில் மேகாலயாவில் 4.0 ரிக்டர் அளவு அதிர்வு பதிவானது. பங்களாதேஷ், கம்போடியாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.