டெல்லி :பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வரவேற்றுள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த வலுவான ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்கு அதிபர் ட்ரம்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான வரிகள் 18%ஆக குறைக்கப்படுகின்றன. இந்திய மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப் பாகங்களுக்கு அமெரிக்கா வரி விலக்கு அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது இந்திய விமானத் துறை மற்றும் உற்பத்தித் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும். அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் (ரூ.45 லட்சம் கோடி அளவுக்கு) அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது இந்தியாவின் எரிசக்தி தேவை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பலனைத் தரும்.ஒட்டுமொத்தமாக, இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான இணக்கமான உறவு மூலம் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என்றும், இது இரு நாடுகளின் பொருளாதார உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு பெரும் பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
