சிட்னி :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி பீச் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. அப்போது இரண்டு துப்பாக்கிதாரிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் காயமடைந்தனர். இது ஆஸ்திரேலியாவின் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று.
தாக்குதல் நடந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் சிறிது கூட பயம் இல்லாமல் தைரியமாக செயல்பட்டார். அவர் பெயர் அகமது அல்-அகமது. 43 வயது பழக்கடை உரிமையாளர். சிரியாவைச் சேர்ந்த ஆஸ்திரேலிய குடிமகன். அவர் கார் பார்க்கிங்கில் இருந்து ஓடி வந்து, ஒரு துப்பாக்கிதாரியை பின்னால் இருந்து தாக்கினார். அவரது ரைஃபிளை பறித்து, துப்பாக்கிதாரியை நோக்கி ஆயுதத்தை திருப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அகமதின் இந்த செயல் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
அகமது தாக்குதலின் போது இரண்டு முறை சுடப்பட்டு காயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உறவினர் முஸ்தபா, “மக்கள் இறப்பதைப் பார்க்க முடியாமல் அவர் தலையிட்டார். அவர் உண்மையான ஹீரோ” என்று கூறினார். அகமதுக்கு ஆயுதம் கையாளும் அனுபவம் இல்லை. ஆனால் மனிதாபிமான உணர்வால் அவர் அப்படி செயல்பட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அகமதை “ஹீரோ” என்று பாராட்டினார். “அவர் தனது உயிரைப் பணயம் வைத்து ஆயுதத்தை பறித்தார். இது ஆஸ்திரேலியாவின் ஒற்றுமையை காட்டுகிறது. யூத விரோதம் அல்லது வெறுப்புக்கு இங்கு இடமில்லை” என்று கூறினார்.
அமெரிக்கா, நியூயார்க் அதிகாரிகள் உட்பட உலகம் முழுவதும் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. “முஸ்லிம் அகமது யூத கொண்டாட்டத்தில் உயிர்களை காப்பாற்றினார்” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.தாக்குதல் நடத்தியவர்கள் தந்தை-மகன் ஜோடி என்று போலீசார் கண்டறிந்துள்ளனர். பெயர்கள் சஜித் அக்ரம் (50 வயது), நவீத் அக்ரம் (24 வயது). தந்தை இறந்தார், மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்த இந்த தாக்குதல் தீவிரவாதம் என்று அறிவிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த துப்பாக்கிசூடு சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதின் தைரியமான செயல் ஒற்றுமைக்கும் மனிதாபிமானத்திற்கும் சின்னமாக போற்றப்படுகிறது. அவரது உடல்நலம் விரைவில் தேற வேண்டும் என்று உலகம் வாழ்த்துகிறது.
