வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து – விஜய் வருகை ஒத்திவைப்பு!

போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று காலை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.அடுத்ததாக திட்டமிடப்பட்டிருந்த வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவெகவின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் இன்று மாலை நடைபெற இருந்த விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சி, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வில்லிவாக்கம் தொகுதியில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், மாவட்ட செயலாளர் பேசுகையில், “விஜய் வரவில்லை என யாரும் வருந்த வேண்டாம். அவர் வேறொரு நாளில் உங்களைச் சந்திப்பார். இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

விஜய்யின் பிரச்சார அட்டவணையில் இன்று மூன்று தொகுதிகளில் (பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம்) பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் முதல் இரு தொகுதிகளில் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் மட்டும் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவெக தரப்பு, வில்லிவாக்கம் தொகுதியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் இது தொடர்பாக முறையான புகார் அளிக்கவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் சிறு இடையூறை ஏற்படுத்தியுள்ள போதிலும், விஜய் விரைவில் வில்லிவாக்கம் தொகுதியில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து – விஜய் வருகை ஒத்திவைப்பு!