வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!
வேலூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன் இரவு ஆட்டோவில் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களிடம் செல்போன், ரூ.40 ஆயிரம் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இந்த வழக்கில் 4 பேர் கைதாகி இருந்தனர்.
அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் குற்றப்பிரிவு போலீசார் , வழக்கு நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
செய்தியாளர்கள் மீது தாக்குதல் :
இன்று தண்டனை வழங்கப்படுவதால் அவர்கள் காலையில் நீதிமன்ற வளாகம் அழைத்துவரப்பட்டனர். அப்போது செய்தியாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முனைந்தனர். அப்போது அந்த குற்றவாளிகளில் ஒருவர் செய்தியாளர்களை தாக்க முற்பட்டார். இதனை பத்திரிகையாளர்கள் கடுமையாக கண்டித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கைதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் வேலூர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதில், பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக..,
2022 மார்ச் மாதம் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் முடிந்து நள்ளிரவு 1 மணி அளவில் அங்கிருந்து தனியார் மருத்துவமனை நோக்கி செல்ல அருகே உள்ள ஆட்டோவை அழைத்துள்ளார். அப்போது இதனை நோட்டமிட்ட 4 பேர் , அந்த ஆட்டோ ஷேர் ஆட்டோ என கூறி எறியுள்ளனர். பிறகு அந்த ஆட்டோ மருத்துவர் சொன்ன இடத்திற்கு செல்லாமல் வேறு இடத்திற்கு சென்றுள்ளது.
அங்கு அந்த மருத்துவரிடம் செல்போன், பணம், நகையை பறித்த கும்பல், அந்த மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனை வெளியில் சொன்னால் பிரச்சனை ஆகிவிடுமோ என அதனை பெண் மருத்துவர் மறைத்துள்ளார் என தெரிகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் வேறு வழிப்பறி சம்பவத்தில் குற்றவாளிகள் இருவர் பணத்தை பங்கு போடுவதில் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது அதனை ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் பிடித்து அவர்களை விசாரித்ததில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஒரு சிறார் உட்பட 4 பேர் இந்த வழக்கில் கைதாகினர். இச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது