விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!

சர்க்கரை ரூ.47 ஆகவும், வெங்காயம் சில இடங்களில் ரூ.50 வரையும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Hero Image

சென்னை : இன்று கூடியுள்ள தமிழக சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், துறை சார்ந்த அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெறுகின்றன. நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் நீடித்த காரணத்தினால், சில துறைகளின் பதிலுரைகள் இன்றி அவை நிறைவடைந்த நிலையில், இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர் பேசுகையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடந்த சில மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மளிகைக் கடைக்குப் செல்வதற்கே யோசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இதேபோல் விலைவாசி உயர்வு ஏற்பட்டபோது, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தைக் கொண்டுவந்து ரேஷன் கடைகள் மூலமாகச் சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் மளிகைப் பொருட்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதைய சூழலில் ரேஷன் கடைகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட அங்கன்வாடி, பசுமை கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றிப் பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து விளக்கம் கொடுத்த அமைச்சர் வெங்கடரமணன்" ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் எதிரொலித்து வருகிறது.

குறிப்பாக சர்க்கரை விலையை எடுத்துக்கொண்டால், முன்பு ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை தற்போது ரூ.47 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தேநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசில், 41 முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலை மாற்றங்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் விலைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் சராசரி விலை கணக்கிடப்படுகிறது. அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து முக்கிய உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

எந்தெந்த பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது, அதற்கான காரணம் என்ன என்பதையும் அரசு ஆய்வு செய்து வருகிறது. பண்டிகைக் கால தேவையால் விலை உயர்ந்துள்ளதா, போக்குவரத்து செலவு மற்றும் டீசல் விலை உயர்வால் விலை அதிகரித்துள்ளதா அல்லது விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

குறிப்பாக வெங்காயத்தின் விலை சில இடங்களில் ரூ.35 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து வெங்காயத்தின் விலை உயர்வையும், தட்டுப்பாட்டையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெங்காய விலை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரேஷன் கடைகள் மட்டுமின்றி, அங்கன்வாடிகள், பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனவும் வெங்கடரமணன் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!