புஷ்பா பட பாணியில் இந்த ஆட்சி நடக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை :தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தவெக அரசுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லை என்று சுட்டிக்காட்டி, “65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகும் முதலமைச்சர், என்னை காப்பாற்ற மாட்டாரா என்ன?” என்று கேள்வி எழுப்பிய காமராஜ் போன்று, தவெக அரசின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார். அவர், “சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்” என்று புள்ளிவிவரங்களை முன்வைத்து வாதிட்டார்.

மேலும் அவர், “நூற்றி எட்டு இடங்களில் வெற்றி பெற்றாலும், அதில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் ராஜினாமா செய்துள்ளீர்கள். இப்போது 106 இடங்கள்தான் உள்ளன. ஆனாலும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளீர்கள். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது” என்று குற்றம் சாட்டினார்.

தவெக அரசின் முதல் கையெழுத்து திட்டங்கள் குறித்தும், “மக்களுக்கு உதவும் திட்டங்களை நிறைவேற்றுங்கள். ஆனால், ஊழல் சக்திகளுடன் இணைந்து செயல்படாதீர்கள்” என்று எச்சரித்தார்.உதயநிதி ஸ்டாலின், “எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். ஆனால், இந்த அரசு நல்லாட்சி தர வேண்டும். மக்களின் நம்பிக்கையை இழக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஆட்சி நடைபெற்று வருகிறது.