சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களைச் சுட்டி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பக்தர்களை மலைக்கு அனுமதிக்காமல் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.இளங்கோவன்) தள்ளுபடி செய்ததால் தனி நீதிபதியின் உத்தரவு முழுமையாக நிலைத்தது.
நேற்று மேல்முறையீடு தள்ளுபடி ஆன 10-15 நிமிடங்களிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் விசாரிக்கத் தொடங்கினார். கோரிக்கை மீதான ஒத்திவைப்பை மறுத்த நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையரை காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக உத்தரவிட்டார். விளக்கம் அளித்த அதிகாரிகளுக்கு நீதிபதி கடுமையாக, “நீதிமன்ற உத்தரவுக்கு முன்னுரிமை உண்டு, நீதிமன்றத்தின் மதிப்பை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.
பின்னர் நீதிபதி உடனடியாக 144 தடை உத்தரவை ரத்து செய்து, நேற்று (04 டிசம்பர் 2025) மாலையே மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமெனவும், அதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.ஆனால் நேற்று (டிசம்பர் 4) மாலை) வரை உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்பதால், இன்று மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் CISF படையினர் திருப்பரங்குன்றம் சென்று அங்கு நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
