அதிமுகவில் பிளவு இல்லை...கருத்து வேறுபாடுதான் இருக்கு - எஸ்.பி.வேலுமணி பேட்டி!

எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளர் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே கோரினோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : அதிமுகவில் எந்தவித பிளவும் இல்லை, வெறும் கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளன என்று எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக, “அமைச்சரவை பதவி கேட்டு நாங்கள் ஒருபோதும் பேசவில்லை” என்று எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேச்சை தொடங்கிய எஸ்.பி. வேலுமணி, “சில ஊடகங்கள் தொடர்ந்து நாங்கள் அமைச்சரவை பதவி எதிர்பார்த்தோம் என்ற வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக சில தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் இதை மிகைப்படுத்தி தவறான தகவல்களை பரப்புகின்றன” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நானோ அல்லது அமைப்பு செயலாளர் சி.வி. சண்முகமோ, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று கூறியதில்லை. அதேபோல் தவெக தரப்பும், நாங்கள் அமைச்சரவை பதவி கேட்கவில்லை என்று ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்களையும் அவர் மறுத்தார். “அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதை சரி செய்ய பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

அதேநேரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்தது பதவிக்காக அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார். “திமுக எதிர்ப்பு அரசியல் மற்றும் மக்கள் மனநிலை காரணமாகவே ஆதரவு கொடுத்தோம். அதோடு, அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் போன்ற ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளையும் அரசிடம் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கட்சியை உடைக்கவும், பிரிக்கவும் எந்த எண்ணமும் இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இந்தக் கட்சி எங்களுடைய உயிர்” என்றும் எஸ்.பி. வேலுமணி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.