முடிவுக்கு வந்த மோதல்! ராமதாஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி!

2.30 மணி நேர சந்திப்பின்மூலம் ராமதாஸ்-அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, மருத்துவர் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் பெரிய அளவில் நேரில் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தனது பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை, அங்கிருந்தவர்கள் பாரம்பரிய முறைப்படி ஆர்த்தி எடுத்து மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் மற்றும் தாயாரை நேரில் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி, காலில் விழுந்து தங்களது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பிற்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், இன்று தனது அப்பா மற்றும் அம்மாவின் திருமண நாள் என்பதால், தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அவர்களைச் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், இந்தச் சந்திப்பின் மூலம் தங்களுக்குள் இருந்த அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், இனிமேல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், 'கிட்டத்தட்ட ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுதுதான் உங்கள் தந்தையை நேரில் சந்தித்துள்ளீர்கள், தற்பொழுது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? உங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதா?' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அன்புமணி ராமதாஸ், குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பான ஒன்றுதான் என்றும், தற்பொழுது பெற்றோரின் ஆசியோடு அந்த அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டன என்றும்; இந்தச் சந்திப்பு தனது மனதிற்குப் பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு வந்த மோதல்! ராமதாஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி!