சேலம் :மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சேலம் – உத்தமசோழபுரம் சாலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது அதிவேகத்தில் மோதியது.
இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இந்த விபத்து தமிழகத்தில் அரசு பேருந்துகள் தொடர்பான விபத்துகள் தொடர்கதையாகி வருவதை மீண்டும் நிரூபித்துள்ளது. பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது, ஓட்டுநர்களுக்கு போதிய பயிற்சி இல்லாதது, அதிவேகம், வாகனங்களின் பழுது உள்ளிட்ட காரணங்கள் மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய விபத்துகள் தொடர்வது பயணிகளின் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். “இத்தகைய வருத்தத்திற்குரிய செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தமிழகத்தில் அரசு பேருந்து பயணிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. அரசு பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் பயிற்சி, வேகக் கட்டுப்பாடு, சாலை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
