சென்னை : தமிழக சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாடப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையிலான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
முதல்வர் விஜய் பேச்சு
தனித் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்தவித சமரசமும் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நம் உயிர்
எல்லா மொழிக்கும் இது பொருந்தும். அதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனா நம்ம தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினா வர்ற ஓசை மட்டுமல்ல. திரும்பவும் சொல்றேன் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது நம் உயிர். அது நம்ம உணர்வு. நம்மள பெத்த தாய 'அம்மா'ன்னு சொல்றப்ப எல்லாம் பாசமும் சொந்தமும் நம்மள அறியாமலே உயிரா, உறவா, உணர்வா தானா உள்ளுக்குள்ள தோணும்ல.
அதே மாதிரி ஏன் இன்னும் ஒரு படி மேல போயே சொல்லலாம். தமிழ்னு சொன்னாலே எப்படி இருக்கும், என்ன ஆகும்னு சொல்லவா வேணும்? தாய் எப்படி ஒரு மிகப்பெரிய புனிதமோ அப்படிதாங்க தாய்மொழியும். அதுலயும் நம்ம தாய்மொழி தமிழ்மொழி. இப்படி சொல்றதே போதும். எல்லாருக்கும் நம்ம தாய்மொழி உணர்வு பத்தி புரியும்னு நினைக்கிறேன். நம்ம தாயே நமக்கு மிகப்பெரிய புனிதம்னா நம்ம எல்லாருக்குமான தமிழ்த்தாய் பத்தி சொல்லவா வேணும்? தாயைப் போற்றுகிற, வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட்றோம்? விடாது. விடவும் மாட்டோம்." எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய " மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! நம்ம தமிழ்த்தாய் வாழ்த்தை 1891-ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார், நம்ம தமிழ் மொழியவே 'தமிழ்த்தாய்'னு சொல்லி உயர்வா பாடினாரு. இந்தியாவுடைய நெற்றியில இருக்கிற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டுதான் நம்ம தமிழ்நாடு.
அந்தப் பொட்டோட நறுமணம் உலகம் பூரா பரவுற மாதிரி தமிழோட புகழும் உலகம் பூரா பரவனும்னு சொன்னாரு. உண்மைதானே அது? இன்னைக்கு தமிழ் பேசுற மக்கள் இல்லாத நாடுகளே ரொம்ப குறைவுதானே. தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது? திரும்பவும் சொல்லலாம். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு. அது ஒரு நாகரிகம். அது ஒரு சிந்தனை. 'தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்'!" என்று முழங்கினார்.
