21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

தமிழகத்தில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

Hero Image

சென்னை: தமிழகத்தில் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அமலில் உள்ள விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • விதி 11A (2003) படி, 21 வயதுக்குட்பட்ட எந்த நபருக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
  • வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களிடம் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது வயதை உறுதிப்படுத்தும் ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணத்தை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
  • 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • விதிமீறல் செய்து 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்தல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு டாஸ்மாக் கடைகளில் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினரை மதுப்பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் நிர்வாகம் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய, அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு தமிழகத்தில் மதுபான விற்பனை தொடர்பான விதிமுறைகளை இறுக்கமாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை