சென்னை :தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளார். இந்த ஏற்பாடுகள் அக்டோபர் 16 முதல் 19 வரை நடைபெறும், அதன் பிறகு திரும்ப வருவோருக்காக 21 முதல் 23 வரை தொடரும். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து, பண்டிகையை கொண்டாடி மீண்டும் திரும்புவதற்கு வசதியாக அமையும்.
சென்னையில் இருந்து மட்டும் 14,268 பேருந்துகள் வெளியேறும் எனவும் அவர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு, பயணிகளின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்த விவாதங்கள் நடந்தன.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.அக்டோபர் 16 முதல் 19 வரை, சென்னையில் வழக்கமான 8,368 பேருந்துகளுடன் 5,900 சிறப்பு பேருந்துகள் இணைக்கப்படும். பிற நகரங்களில் இருந்து 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், இவை மொத்தம் 20,378 ஆகும். பண்டிகை முடிவடைந்த பின், அக்டோபர் 21 முதல் 23 வரை, பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக 6,276 வழக்கமான பேருந்துகளுடன் 4,253 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையைத் தாண்டிய பிற இடங்களுக்கு 4,600 சிறப்பு பேருந்துகள் இணைந்து, மொத்தம் 15,129 பேருந்துகள் செயல்படும். பயணிகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் செய்யலாம். கிளாம்பாக்கம் மூலம் புதுச்சேரி, திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு; கோயம்பேடு வழியாக பெங்களூரு, வேலூர் போன்றவற்றுக்கு மாதவரம் மூலம் ஆந்திரா, திருவண்ணாமலை வழிகளுக்கு பேருந்துகள் உண்டு.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார் பயணிகள் ஓஎம்ஆர் அல்லது வெளிச்சுற்று சாலைகளைப் பயன்படுத்தலாம். முன்பதிவுக்கு கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேடுவில் 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அக்டோபர் 16 முதல் 19 வரை காலை 7 முதல் இரவு 9 வரை செயல்படும். மேலும் ஆப் மற்றும் இணையதளங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.
