மின்கட்டண உயர்வு குறித்த கேள்வி: அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த தெளிவான பதில் என்ன?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுமா என்ற மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்திற்குப் பதிலளித்த அமைச்சர் CTR நிர்மல்குமார், இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ள சூழலில், இந்த கட்டண உயர்வுக்குக் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தவறான முடிவுகளே காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மின் கட்டண திருத்த முறைதான் (Tariff Revision) தற்போதைய தொடர் மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் " கடந்த திமுக அரசு கொண்டு வந்த அரசாணையின்படி, ஆண்டுதோறும் அதிகபட்சமாக 6 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற சட்ட விதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் அரசிடம் தனியாக அனுமதி கேட்கத் தேவையில்லாமல், தானியங்கி முறையில் (Automatic) மின் கட்டணம் உயரும் வழக்கமான நடைமுறையைத் திமுக அரசு ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு கொண்டு வந்த இந்த தவறான மின் கொள்கை, சாதாரண நுகர்வோர் மட்டுமின்றி வணிகப் பயன்பாட்டாளர்கள் (Commercial Users) மற்றும் பெரிய தொழில்துறையினரையும் (High Tension Users) கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் இந்த தவறான கொள்கை முடிவைச் சரிசெய்வது குறித்தும், இதனால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை நுகர்வோருக்குப் பாதிப்பில்லாத வகையில் எப்படி ஈடுகட்டுவது என்பது குறித்தும் தற்பொழுது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டண உயர்வு நடைமுறையிலிருந்து பொதுமக்களுக்குக் குறைந்தபட்சப் பாதிப்புக் கூட ஏற்படாத வகையில் என்ன மாதிரியான கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்பது குறித்து தற்பொழுது முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறைச் செயலாளர் (Finance Secretary) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவாகப் பேசி, முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான அரசின் இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதியளித்துள்ளார்.