தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியார்மயம் – அமைச்சர் தங்கமணி விளக்கம்

Minister Thangamani's explanation on the decision of the Government of Tamil Nadu to outsource electricity to private companies.

தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியார் மூலம் பணியாட்கள் தேர்வு – மின்வாரிய பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் தமிழக அரசின் முடிவு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 12,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என கூறப்பட்டது.

மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் என அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிட்டுள்ள மின்சாரத் துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்தில் தனியார் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானது. தமிழக மின்வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாகாது. மின்சார பணிகளில் தங்கு தடையில்லாமல் இருக்க ஓப்பந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, தனியார்மயமாக்கவில்லை என்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்றும் விளக்கமளித்துள்ளார்.