ராமேஸ்வரம் கஃபே: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நிறைவு

Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை இன்று நடைபெற்றது. அதே போல பெங்களூரில் நடைபெற்ற சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம், குறிப்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய தொப்பி ஒன்று மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்ட முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது.

இருவரும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் இன்று என்ஐஏ சோதனை நடைபெற்றது.

சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அபுதாஹீர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அபுதாஹீரின் செல்போனை  பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராயப்பேட்டையில் லியாகத் அலி என்பவர் வீட்டிலும் நான்கு மணி நேரம் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. அவரது செல்போனையும் என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையில் ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரில் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் தாக்குதல்தாரியுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்