சிறுமி வன்கொடுமை வழக்கு; புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தஷ்வந்த்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

daswant case

சென்னை :போரூர் பகுதியில் 2017 பிப்ரவரி 5 அன்று, 6 வயது சிறுமி ஹாசினி தனது வீட்டு அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதனையடுத்து, மாங்காடு போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தேடுதல் நடத்தியதில், அருகிலுள்ள கழிவறையில் அவரது எரிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், பக்கத்து வீட்டில் வசித்த 21 வயது இளைஞர் தஷ்வந்த், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை பையில் போட்டு அனகாபுத்தூர் அருகே தீவைத்து அழித்ததாகத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே அதிரச் செய்து, சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களைத் தூண்டியது.போலீசார் தஷ்வந்த்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது, ஆனால் ஐகோர்ட்டு உத்தரவால் அது ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியேறினார். இதற்கிடையே, செலவுக்கு பணம் கேட்டு மறுத்த தன் தாய் சரளாவை சுத்தியலால் குத்தி கொன்று, அவர் தங்கச் சங்கிலியைத் திருடி மும்பைக்கு தப்பி ஓடினார். போலீசார் அங்கு அவரைப் பிடித்து மீண்டும் புழல் சிறைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு POCSO கோர்ட்டு, 2018 பிப்ரவரி 19 அன்று தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த அவர், அங்கும் தண்டனை உறுதியானது.தூக்கு தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அக்டோபர் 9 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், “வழக்குகளை சட்ட ரீதியாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். அறக்கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் தண்டனை விதிக்கக்கூடாது. வெகுஜன உணர்வுகள் அல்லது புற அழுத்தங்களால் நீதிமன்றங்கள் ஆட்கொள்ளக்கூடாது. தஷ்வந்த்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால், தூக்கு தண்டனை ரத்து. அவரை விடுதலை செய்ய உத்தரவு” என்று கூறியது.

இந்தத் தீர்ப்பு, சட்ட வல்லுநர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புழல் மத்திய சிறையின் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த், அக்டோபர் 9 இரவு விடுதலை செய்யப்பட்டார். சிறுமி ஹாசினியின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தத் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.