லாக்அப் டெத் வழக்கு: ‘உணவு கூட கொடுக்காமல் அடித்து கொன்றனர்’ – தாய் குற்றச்சாட்டு!

அஜித் மீது பொய் புகார் கூறிய நிகிதாவை கைது செய்ய வேண்டும் என அஜித்தின் தாய் மாலதி ஆவேசமாக பேசியுள்ளார்.

Featured image

விழுப்புரம் :மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், சிபிஐ விசாரணையின் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் (கஸ்டடி டெத்) என சிபிஐ உறுதிப்படுத்தியுள்ளது. நகை திருட்டு என்று நிகிதா அளித்த புகார் பொய்யானது என்றும், அஜித்குமாரை தாக்கியது காவல்துறையினரே என்றும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இதில் டிஎஸ்பி உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த பதிலில், அஜித்குமாரை தாக்கியது முன்விரோதம் காரணமாக இல்லை என்றும், டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் காவலர்கள் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கு வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில், “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். தவறு செய்த காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம்” என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.அஜித்குமாரின் தாயார் மாலதி, மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசியுள்ளார்.

“என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. நகை திருடு போனதாக பொய் புகார் அளித்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். போலீசார் தனது மகனை பொய் புகாரின் பேரில் அடித்தே கொன்று விட்டதாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மாலதி வலியுறுத்தினார்.

தாயார் மாலதி மேலும் கூறுகையில், “எனது மகனை அடிக்க யார் உத்தரவிட்டது? அந்த 5 பேர் யார்? போலீசார் அஜித்தை பட்டினியாக போட்டு, உணவு கூட கொடுக்காமல் அடித்து கொலை செய்துள்ளனர்” என்று ஆவேசமாக பேசினார். “என் மகன் தீவிரவாதியா? மிளகாய் பொடி கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையினர் மனித பிறவிகளா?” என்று கேள்வி எழுப்பிய அவர், நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

அஜித்குமார் குடும்பத்தினர் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். “நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை எடுத்தனர்?” என்று கேட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை காவலர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பெரும் விமர்சனத்தையும், நீதி கோரும் குரல்களையும் உருவாக்கியுள்ளது.