சென்னை : தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு நாளில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வாக்குப்பதிவு நடைபெறும் தினங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அசாம், புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பொருந்தும். அசாம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையம், 2026ஆம் ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற பொதுத் தேர்தல்களுக்கான தேதிகளை மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது.
அதேநேரத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 135B படி, எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தால், வாக்குப்பதிவு நாளில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இந்த விடுமுறைக்காக ஊதியம் கழிக்கப்படக் கூடாது. தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் இதே உரிமை உண்டு.வேறு தொகுதியில் வேலை செய்தாலும், தங்கள் வாக்காளர் பதிவு செய்யப்பட்ட இடத்தில் வாக்களிக்க விரும்பும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
