கரூர் துயரம் : மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பிக்க விஜய் நீதிமன்றத்தை நாடுகிறார் – வன்னி அரசு!

மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் என விசிக துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், தீவிர சிகிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டை மெக்கானிக் கவின் (31) உயிரிழப்புடன், பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமிழக அரசு, ஓய்வூதிய நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து .கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை, விசாரணையை தொடங்கியுள்ளது. போலீஸ், தவெக தரப்பு 10,000 பேர் என்று கூறியிருந்தாலும் 27,000-க்கும் மேற்பட்டோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. விஜயின் வருகை தாமதம், வாகனத்தை தொடர்ந்து வந்த தொண்டர்கள், உணவு-தண்ணீர் இல்லாமை போன்ற காரணங்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது ஜாமீன் பெறுவதற்கு கடினமானது.தவெக கட்சி, இந்த சம்பவத்தை ‘திட்டமிட்ட சதி’ என்று கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. “கரூர் விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை. சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும்,” என்று கட்சி தெரிவித்துள்ளது.இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, “நாளை (செப்டம்பர் 29) மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அதன் பிறகு நம் கருத்தை தெரிவிப்போம்,” என்று கூறினார்.

உயிரிழந்த குடும்பங்களை சந்திக்க விஜய் கரூர் வருவாரா என்ற கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. விசிக துணை பொதுச் செயலாளர், தவெகவின் இந்த முறையீட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். “சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலைக் கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில்தானா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.