சென்னை :கரூர் நெரிசல் வழக்கில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே இதே வழக்கில் ஜனவரி 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் விஜய் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார். இருப்பினும், விசாரணை தொடரும் நிலையில் மீண்டும் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் தற்போது தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கவிருக்கும் நேரத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விஜய் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், நிகழ்வின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட அமைப்பு, பொறுப்பு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மன் தேர்தல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக தலைமை இந்த சம்மனை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருவதாகவும், விஜய் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.
