டெல்லி :கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு இந்த விசாரணையை கண்காணித்து வருகிறது.
சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தலைவர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. ஜனவரி 12ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 12ஆம் தேதி காலை 11:30 மணியளவில் விசாரணை தொடங்கியது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இவ்விசாரணையில், கூட்ட ஏற்பாடு யார் செய்தது, நிகழ்ச்சி தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா, தாமதம் ஏன் ஏற்பட்டது, நெரிசல் ஏற்பட்டபோது கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டதா, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு-வெளியேறும் வழி ஏற்பாடு செய்யப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. விஜய் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளித்ததாக தெரிகிறது.முதற்கட்ட விசாரணை முடிந்ததும் விஜய் சென்னை திரும்பினார்.
சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த விரும்பிய போதிலும், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால அவகாசம் கோரிய விஜயின் கோரிக்கையை ஏற்று, அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்று (ஜனவரி 19) சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விஜய் ஆஜராகிறார். இன்றைய விசாரணையில் மேலும் ஆழமான கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ விசாரணை முழுமையடைந்த பிறகு, சம்பவத்தின் உண்மை நிலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
