சென்னை :நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கடந்த 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சமூகச் செயற்பாட்டாளராக அறியப்பட்ட காளியம்மாள், 2018-ஆம் ஆண்டு கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரது பேச்சைக் கேட்ட மறைந்த சாகுல் ஹமீது அவரை கட்சியில் இணைத்தார்.
மேலும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பலரின் பாராட்டைப் பெற்று அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15,000 வாக்குகளைப் பெற்றார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 20,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தார்.கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறினார். வெளியேறிய பின்னரும் அக்கட்சி அல்லது சீமான் குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் அமைதியாக இருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். இந்த சந்திப்பின்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், கூட்டணியில் பா.ம.கவுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படாத பட்சத்தில், காளியம்மாளுக்கு அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காளியம்மாளின் இணைப்பு அதிமுகவுக்கு மயிலாடுதுறை தொகுதியில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் தமிழக அரசியல் களத்தில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
