10,000 பேர் வருவார்கள் என்று கணித்ததே தவறு! கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் சரமாரி கேள்வி!

கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

karur vijay

கரூர்: தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலாளர்கள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ், அரசு தரப்பு வாதங்களை முன்வைத்தது. இந்த நீதிமன்ற விசாரணையில், போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், 41 உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வாதிட்டது.

“போலீஸ் தரப்பு, விஜய் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெகவினர் நிபந்தனைகளை மீறினர்,” என்று வாதிட்டது. நீதிமன்ற நீதிபதி பரத் குமார், “அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன, தவெக தரப்பு வாதம் கேட்கப்படும்,” என்று தெரிவித்தார்.தவெக தரப்பு, “ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்தது தானாக வந்த கூட்டம், வண்டி வைத்து அழைத்து வரவில்லை. 10,000 பேர் வருவார்கள் என போலீஸிடம் கூறினோம், ஏனெனில் சம்பள நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று கணித்தோம்,” என்று வாதிட்டது.

“உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை அழைத்து ஆய்வு செய்தோம். 23-ம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது. கூட்டம் அளவை கடந்ததும், பேருந்தை முன்பாக நிறுத்தி பேசச் சொல்லி கூறினோம், ஆனால் ஆதவ் அர்ஜுனா மறுத்தார்,” என்று தவெக தரப்பு சேர்த்தது. “கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்,” என்று வாதிட்டது.

நீதிமன்ற நீதிபதி பரத் குமார், தவெக தரப்புக்கு கடுமையான கேள்விகள் எழுப்பினார். “விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார், பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் கோரிய 3 இடமுமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

“கூட்டம் அளவை கடந்ததும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?” என்றும் கேட்டார்.போலீஸ் தரப்பு வாதம், “விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் நெரிசல் ஏற்பட்டது. 3 மணிக்கே வந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றனர். அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார், அப்போதே நிராகரிக்க வேண்டியது தானே?” என்று கூறியது. “என் நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள், அதனால்தான் விஜய் வெளியே வரவில்லை,” என்று தவெக தரப்பு உணர்ச்சிபூர்வமாக வாதிட்டது. இந்த விசாரணை, நீதிமன்றத்தில் தொடர்கிறது.