“தவறுதலாக நடந்தது” – நயன்தாரா விவகாரத்தில் சி.வி. சண்முகம் மன்னிப்பு!

மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டத்துடன் நயன்தாரவை சம்மந்தப்படுத்தி சி.வி. சண்முகம் (அதிமுக எம்.பி) கிண்டல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

cv shanmugam nayanthara

சென்னை :தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறி, திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் மார்ச் 17 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலும், தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இவை பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களாக அமைந்தன.இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற அதே கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய பேச்சு ஒன்றை ஆற்றியுள்ளார். “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். ஆனால் முதலமைச்சர் ஒரு படி மேலே போய் கனவைச் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார்.

எனக்கு நயன்தாரா வேண்டும், நயன்தாராவை திருமணம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை நிறைவேற்றுவாரா?” என்று அவர் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன. நடிகை நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் கோபம் பரவியது. சி.வி. சண்முகம் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பேச்சுகளால் விமர்சனத்துக்கு உள்ளாகுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால், ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக உயர் நீதிமன்றமே அவரை கண்டித்துள்ளது.இந்நிலையில், சி.வி. சண்முகம் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். “நயன்தாரா என்ற பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். எந்த தவறான நோக்கமும் இல்லாமல், தவறுதலாக வார்த்தை பயன்படுத்தப்பட்டது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன. ஆனால் விழுப்புரத்தில் சி.வி. சண்முகத்தின் சர்ச்சை பேச்சு அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே கெடுக்கும் வகையில் அமைந்துவிட்டது. இதனால் கூட்டணி தரப்பிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“தவறுதலாக நடந்தது” – நயன்தாரா விவகாரத்தில் சி.வி. சண்முகம் மன்னிப்பு!