சென்னை :2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது பிரசார மற்றும் அமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 10 வார பயணம், தவெகவின் 120 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கி, ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
திருச்சியில் தொடங்கி, முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி, விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட உள்ளூர் விவகாரங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரத்யேக பிரசார வாகனம் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
தவெகவின் தேர்தல் தயாரிப்பில் முக்கிய மைல்கல்லாக, மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு அமைந்தது. மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில், பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்த மாநாடு, 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை தொண்டர்களை ஈர்த்து, பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக, 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.
மாநாடை தொடர்ந்து விஜய் எப்போது மக்களை சந்திக்க போகிறார் என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், தற்போது அதற்கான தகவலும் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 13, 2025 முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அரசு மற்றும் உள்ளூர் அமைச்சர்களை விமர்சிக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு த.வெ.க தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
