இடைக்கால பட்ஜெட் 2026 – கட்டமைப்பு வளர்ச்சிக்கு மேகா ஒதுக்கீடு!

வடசென்னை வளர்ச்சி திட்டம், இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடியும், மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.1,722 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்று நிதியமைச்சர் அறிவித்தார்.வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.வடசென்னை வளர்ச்சி திட்டம் இலட்சியத் திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று நிதியமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார். காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கரையோரம் பூங்காக்கள் அமைக்கும் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிவதாகவும், 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், நதிக்கரை மேம்பாடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு கணிசமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் நலன், இலங்கை தமிழர்கள் நலன், தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக நிதியமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். இந்த பட்ஜெட் தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.