சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இறங்கியபோது ராமதாஸ் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரது தொண்டர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, தற்போது ராமதாஸ் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஏற்பட்ட மயக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மருத்துவர்கள் கூடுதல் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து அ.இ.பு.த.ம.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கையில்,“பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார். விரைவில் பூரணமாக குணமடைந்து புதிய உத்வேகத்துடன் ஆண்டவனின் துணையுடன் மீண்டும் தமிழ்நாடு மக்களைச் சந்திக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
ராமதாஸ் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.ராமதாஸ் விரைவில் முழு குணமடைந்து மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அவரது உடல்நலம் விரைவில் சீரடைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
