சென்னை :உச்ச நீதிமன்றம் தெருநாய்கள் பிரச்சினைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த வளாகங்களிலிருந்து தெருநாய்களை உடனடியாக அகற்றி, நாய் காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், நாய்கள் நுழையாமல் தடுக்க வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வளாகத்தைப் பராமரிக்கவும், நாய்கள் நுழைவதைத் தடுக்கவும் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகளும், பஞ்சாயத்து அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சிறப்பு ரோந்து குழுக்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என்றும், அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்றும் தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விபத்துகள் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் உடனடியாக இந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தெருநாய்கள் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவுகள் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன. பொது இடங்களில் நாய்கள் நுழைவதால் ஏற்படும் அச்சுறுத்தல், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை முழுமையாகத் தடுக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தெருநாய்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்த உத்தரவுகள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
