சென்னை :தவெக தலைவர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீய நோக்கத்துடன் மத்திய அரசு தணிக்கை வாரியத்தை பயன்படுத்தி படத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன.
இது தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமம் என்று விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி வலைப்பதிவில், ‘ஜனநாயகன்’ படத்தை தடுப்பது தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமம் என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியமும் மத்திய அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐக்கு பிறகு தற்போது தணிக்கை வாரியத்தை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தலுக்கான கருவிகளாக மாறியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் இது அமைவதாக காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
‘ஜனநாயகன்’ படத்தின் தாமதம் அரசியல் ரீதியான பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தணிக்கை வாரியம் புகார்கள் அடிப்படையில் மறு ஆய்வுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
unknown node