பயிர்க்கடன் தள்ளுபடி.. நெசவாளர்களுக்கு ரூ.30,000! திருப்பூரில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

நாளை மறுநாள் ஏப்ரல்16 வியாழக்கிழமை தவெக தேர்தல் அறிக்கை புத்தகம் வெளியிடப்படும் எனவும் த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

Hero Image

திருப்பூர் : தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நோக்கி செல்லும் வழியில் தொண்டர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றார். அவிநாசியில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், ரசிகர்களின் அமோக வரவேற்பு விஜய்யை உற்சாகப்படுத்தியது. அதன்பிறகு பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் பேசினார். பேச்சைத் தொடங்கிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே! திருப்பூர் பகுதி மக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.விஜய் மேலும் கூறியதாவது:“Day after tomorrow, April 16-ஆம் தேதி நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை ஒரு புத்தகமாக வெளியிடுகிறோம்.

அதற்கு முன்னால் இங்கே சில முக்கிய புள்ளிகளை மட்டும் உங்களுக்குப் படித்துக் காட்டிவிட்டுப் போகிறேன். அதை மட்டும் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.நெசவாளர்கள், சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள், விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தமான நம்முடைய agenda-வில் சில முக்கிய அம்சங்களை உங்களிடம் படிக்கிறேன்.

  1. நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான உலகளாவிய e-commerce brand உருவாக்கப்படும். மேலும், முக்கிய நகரங்களில் ‘வெற்றித்தரி’ விற்பனை நிலையங்கள் மற்றும் showrooms அமைக்கப்படும்.
  2. நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ள, கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.30,000 வங்கி மூலம் நேரடியாக TVK அரசு வழங்கும்.
  3. கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
  4. நெசவாளர்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க, அவர்கள் பயன்படுத்தும் நூல், சாயங்கள் மற்றும் ரசாயனங்களுக்கு 50% மானியம் வழங்கப்படும்.
  5. அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும், நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000-ஆக உயர்த்தப்படும்.

இதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி State Credit Guarantee Fund உருவாக்கப்படும். Peak hours மின்கட்டணம் நிறுத்தி வைக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். ஒரு unit-க்கு ரூ.50 லட்சம் வரை 35% நேரடி மூலதன மானியம் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ளவர்களுக்கு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி. நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.காவல் துறையினருக்கு அடிப்படை ஊதியம் ரூ.18,200-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்படும்.

அதிக மன அழுத்தப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 பணிப்படி. Police Welfare and Working Conditions Act இயற்றப்படும்.இறுதியாக விஜய், “நீங்கள் எல்லாரும் இந்த விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும்தான் வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும்தான் வந்திருக்கிறேன்.

பொய் வாக்குறுதிகள் கொடுத்து உங்களை ஏமாத்த மாட்டேன்.எனவே உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கட்டும்.Confident-ஆ இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்… வெற்றி நிச்சயம்… வெற்றி நிச்சயம்!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசி முடித்தார்.விஜய்யின் பேச்சுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.