கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்ளவதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவி உடல் கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆராய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஜிப்மரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். மாணவியின் உடல் கூராய்வு அறிக்கை குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து ஆணையிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம், ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் எனவும் பெற்றோருக்கு கேள்வி எழுப்பப்பட்டது. மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர், அது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது என்றும் நீதிபதி சதீஷ்குமார் கூறியிருந்தார். இதையடுத்து, நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உடலை பெற்றுக் கொள்வது தொடர்பாக மதியம் 12 மணிக்கு விளக்கம் அளிக்க மாணவி தந்தை தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாணவியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்குகளை நடத்துங்க, மகளின் ஆன்ம இளைப்பாறட்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்ளவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை நாளை காலை 6-7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாளைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
முன்னதாக, மாணவியின் உடலை வாங்குவதற்கு ஏன் தாமதம் என நீதிமன்றம் பெற்றோரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளார். மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சுமார் 10 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.