ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் – ஈபிஎஸ்க்கு திமுக கண்டனம்!

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதன் விளைவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார் என்று திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் கூறியுள்ளார்.

Thuraiyur - 108 Ambulance

திருச்சி :துறையூரில், ஆகஸ்ட் 25, 2025 அன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) பிரச்சாரத்தின்போது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக மருத்துவ அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான எழிலன், ஈபிஎஸ்-இன் பொறுப்பற்ற பேச்சு இந்த தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சம்பவத்தின்போது, விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸை அதிமுக தொண்டர்கள் வழிமறித்து, ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றனர்.

இதில், ஆம்புலன்ஸில் இருந்த 7 மாத கர்ப்பிணி ஊழியரும் தாக்கப்பட்டதாக எழிலன் குறிப்பிட்டார். இதற்கு முன்னர், வேலூரில் நடந்த பிரச்சாரத்தின்போது, ஈபிஎஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், இது தாக்குதலுக்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எழிலன் பேசுகையில், “அரசியல் வரலாற்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவறானவர் என சுட்டிக்காட்டி பேசிய முதல் தலைவர் ஈபிஎஸ் தான். அவரது பேச்சு அடுத்த கூட்டத்திலேயே எதிரொலித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது,” என விமர்சித்தார்.

மேலும், ஈபிஎஸ்-இன் இத்தகைய பேச்சு மக்கள் பாதுகாப்பிற்கு எதிரானது எனவும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.