2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பாஜகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மண்டலத்தில் கட்சியின் முக்கிய முகங்களான அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் இடையே சீட் தொடர்பாக கடும் போட்டி நிலவி வருகிறது.கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முன்பு பேசப்பட்ட நிலையில், தற்போது கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு எஞ்சியுள்ளது.
இந்தத் தொகுதியை கைப்பற்ற இருவருக்கும் இடையே மியூஸிகல் சேர் போட்டி நடைபெற்று வருகிறது.பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன், கடந்த சில மாதங்களாக கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருவதால், அந்தத் தொகுதி தனக்குத்தான் என்று உறுதியாக நம்புகிறார். ஏற்கனவே வடவள்ளி, கணபதி, சாய்பாபாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து அவர் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
மேலும், டெல்லி மேலிடத்தின் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.மறுபுறம், அண்ணாமலை தனக்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, அதற்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே அந்தத் தொகுதி எனக்கு வழங்கப்பட வேண்டும்” என்று அவர் கட்சித் தலைமையிடம் வாதிடுகிறார்.
எனவே, தொகுதி ஒதுக்கீட்டில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்திய அண்ணாமலை, பாஜக வளர்ந்து வரும் தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை ஒதுக்குவதா என்று கட்சி மேலிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தொகுதி ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தியடைந்ததால், இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கட்சித் தலைமைக்கு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
